நடிகை டாப்ஸி
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என சில வாய்ப்புகளை நிராகரித்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் நடித்துள்ள டாப்ஸி, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொண்ட ‘பிங்க்’, ‘முல்க்’, ‘தப்பட்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரி’, நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: திரைத்துறையில் உள்ள பலர், தங்கள் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருந்து கொண்டு ஏற்கெனவே வெற்றிபெற்ற முறைகளையே மீண்டும் மீண்டும் பின்பற்றி வருகின்றனர்.
கிளாமர் கதாபாத்திரங்களுக்கு என்றால் சில நடிகைகளையும், சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படங்கள் என்றால் வேறு சில நடிகைகளையும் முன்முடிவாகத் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள்.
இதற்காகத்தான் பல வாய்ப்புகளை மறுத்து வருகிறேன். சில கதைகளை கேட்கும்போது, படத்தின் முடிவு எளிதில் யூகிக்கக் கூடியதாக இருந்தால், ‘என்னை இதில் நடிக்க வைக்காதீர்கள், இது படத்துக்கே பாதகமாக முடியும்’ என்று வெளிப்படையாகக் கூறி இருக்கிறேன். என் திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே வணிக ரீதியான மற்றும் எளிமையான கதாபாத்திர வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அந்த வகையான கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு எளிதில் லாபத்தையும் பிரபலமாவதையும் தேடித் தரக்கூடியவை. அத்தகைய வாய்ப்புகள் கிடைக்காததால், நான் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தேன். என் நேரம், நான் நடித்த அந்தப் படங்கள் திரையுலகின் முக்கியப் படைப்பாக மாறிப்போயின. இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.