நடிகை டாப்ஸி, இப்போது இந்தி திரைப்படங்களில் நடித்துவருகிறார். அனுபவ் சின்கா இயக்கத்தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
மேலும் 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில், ஃபிட்டான புகைப்படங்களைப் போடுவதற்காக தயவுசெய்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள்” என்று இளம் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “வளரும் பருவத்தில் நான் ஆரோக்கியமாகவே இருந்தேன். ஆனாலும் என் அடிவயிற்றில் மட்டும் ஏன் எப்போதும் கொழுப்பு இருக்கிறது என்பது புரியவில்லை. அதைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, என் சக்தியையும் மீறி கடுமையாக உடற்பயிற்சி செய்தேன்.
நாம் உடலை அளவுக்கு அதிகமாக வருத்தும்போது, ‘உடலுக்குப் பாதுகாப்பு தேவை’ என்கிற எச்சரிக்கை சிக்னலை நம் மூளை கொடுத்துவிடும். இதனால், உடல் எடை குறைவதற்குப் பதிலாக, உடல் தண்ணீரைத் தக்க வைக்க ஆரம்பித்துவிடும். இதனால் அந்த அடிவயிற்றுச் சதை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதனால் இதைப் பெண்கள் செய்யக் கூடாது. ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்பும் வெவ்வேறானது.
ஒரு பெண்ணின் உடல் பல ஹார்மோன் மாற்றங்களைக் கடந்து செல்வதால், தினமும் வயிறு, ஒரே மாதிரி தட்டையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நான் என்னைச் ‘சித்ரவதை’ செய்து கொண்ட பிறகே தாமதமாக இதைப் புரிந்து கொண்டேன். என்னுடைய ஊட்டச் சத்து நிபுணர்தான் எனக்கு இதை விளக்கினார்.
பெண்களின் அடி வயிற்றுப் பகுதியில் தான் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க அந்தப் பகுதியில் சிறிதளவு கொழுப்பு இருப்பது மிகவும் அவசியம். எனவே, இன்ஸ்டாகிராமில் ஃபிட்டான புகைப் படங்களைப் போடுவதற்காக தயவு செய்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார்.