சிறந்த நடிகைகளில் ஒருவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே தனது கனவு என்று நடிகை மிருணாள் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறேன். அது என்னைப் பதற்றமடைய செய்கிறது. ஆனால் இன்றும் கூட, அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு எனக்குத் தைரியம் தேவைப் படுகிறது. அது ஏனென்று தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. ‘நீ உன் திறமையை அல்லது உன்னை குறைத்து மதிப்பிடுகிறாய்’ என்று பலர் சொல்கிறார்கள். அதைச் சரி செய்ய நான் முயற்சி செய்து வருகிறேன். இது இப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
இந்தத் தருணத்தை ரசிக்கவும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறேன். இன்றைய தலைமுறையின் சிறந்த நடிகைகளில் ஒருவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது என் கனவு. அதேநேரம், அதை வணிக ரீதியான வெற்றியின் மூலமும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. நான் இன்னும் நிரூபிக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலேயே நான் எதிர்கொள்கிறேன்.
என்னுள் இருக்கும் சிறந்ததை வெளிக் கொண்டு வரும் இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். என்னை கதாநாயகியாக மட்டும் காட்டாமல், என் கதாபாத்திரம் தான் முக்கியம் என்பதை உணர்த்தும் படங்களிலும் அப்படியான இயக்குநர்களுடன் பணியாற்ற ஆசை. சினிமாவில் முதல் இடத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், என் கடைசி மூச்சுவரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். இவ்வாறு மிருணாள் தாக்குர் கூறினார்.