நடிகை அக்ஷரா ஹாசன்
நடிகை அக் ஷரா ஹாசன் இப்போது நடித்துள்ள படம், ‘சிமுலாக்ரா’. எதிர்கால உலகை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதை படமான இதில் சத்யஜித் துபே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பங்கஜ் சாவந் இயக்கியுள்ள இப்படம், வேவ்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 17) வெளியாகிறது.
இப்படம் குறித்து அக் ஷரா ஹாசன் கூறும்போது, ‘‘இதில் நிவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்காக வேறுவிதமான முதிர்ச்சி தேவைப்பட்டது. கதையின் பல அடுக்குகள் காரணமாக, ஒரு நடிகையாக என்னுள் இருந்த புதிய பரிமாணத்தைக் கண்டறிய முடிந்தது.
பலவிதமான உணர்வுகளின் மோதல் களை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தக் கதாபாத்திரம் ஒரு நடிகையாக எனக்கு பெரும் சவாலைக் கொடுத்தது. ‘நிவி’யாக நடித்த அனுபவத்தை நான் உண்மையிலேயே ரசித்தேன்” என்றார்.
சத்யஜித் துபே கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில், இந்தக் கதை இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் நோக்கமும், அதை உயிர்ப்புடன் திரையில் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வமும் என்னை ஊக்கப்படுத்தின. அதனால் இதில் நடித்தேன்” என்றார்.