பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, தமிழில ‘12 பி’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி ஹீரோக்களை தென்னிந்திய படங்களில் வில்லனாகக் காட்டவே விரும்புகிறார்கள் என்பதால் அப்படங்களை நிராகரிப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுனில் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, எதிர்மறை வேடங்களே அதிகம் வருகின்றன. அவர்கள் இந்தி ஹீரோக்களை சக்தி வாய்ந்த வில்லனாகக் காட்ட விரும்புகிறார்கள். அது பார்வையாளர்களுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்காத விஷயம்.
நான் ரஜினி சாருடன் ‘தர்பார்’ படத்தில் நடித்திருந்தேன். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பதற்காகவே அப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்.
சமீபத்தில், ‘ஜெய்’ என்ற துளு மொழி படத்தில் நடித்தேன். பான் இந்தியா படங்கள் என்றான பிறகு இன்று மொழி தடையில்லை. கதை நன்றாக இருந்தால், அது எல்லா தடைகளையும் தாண்டிச் செல்லும்” என்றார்.