நடிகர் ஷாருக்கான்
தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் தற்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சுஹானா கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி, அனில் கபூர் என பலர் நடித்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படம், டிச.24-ல் வெளியாகிறது. இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள டாடி கூல் என்ற பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக்கான் கூறும்போது, “நான் சினிமா துறைக்குள் நுழைந்தபோது அழகான நடிகன் என என்னைக் கருதியதில்லை. இருந்தாலும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம்.
எனக்கு இப்போது 61 வயதாகிவிட்டது. இளம் கதாநாயகிகளுடன் வழக்கமான காதல் நாயகனாக நடிப்பதை விட, வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
ஒரு படத்தில் காதல் காட்சியில் இளம் நடிகையிடம் வசனம் பேசிக்கொண்டிருந்தேன். ‘நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்; உன் கண்களில் தொலைந்து போக விரும்புகிறேன். உன்னைப் பார்க்கும்போது இந்த உலகத்தையே பார்த்தது போல் உணர்கிறேன்’ என பேசிவிட்டு, ‘நாளைய வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டாய் என நம்புகிறேன், மகளே’ என்று சொல்லிவிட்டேன்.
இதுபோன்ற தருணங்கள்தான், எனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கும் எனக்குமான வயது வித்தியாசத்தை உணர்த்தியது. இந்தப் படத்தில் வெள்ளை முடியுடன் நடித்திருப்பதற்கான காரணம் கூட அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.