மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்பட பலர் நடித்து, அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘த பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபலமானவர்கள் இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீகே.
இந்த வெப் தொடரின் அடுத்தடுத்த சீசனும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த வெப் தொடரின் 4-வது சீசனும் உருவாக இருக்கிறது. இந்நிலையில் சல்மான் கான் நடிக்கும் ஆக்ஷன் காமெடி படத்தை ராஜ் மற்றும் டீகே, இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் சொன்ன ஐடியா சல்மான் கானுக்கு பிடித்திருப்பதாகவும் முழு கதையையும் அவர் விரைவில் கேட்பார் என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தைப் பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனமான மைத்ரி மூவிஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. சல்மான் கான் நடித்துள்ள ‘கல்வான்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. அது வெளியான பின் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இதற்கிடையே, கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’, விஜய், ராஷ்மிகா நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கிய வம்சிபைடிபள்ளி இயக்கத்திலும் சல்மான்கான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.