இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன் ‘மீ டு’ வில் பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் பரபரப்பான இவர், சினிமாவில் இருந்து இப்போது ஒதுங்கி இருக்கிறார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா கனவுகளுடன் வரும் இளம்பெண்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்து எச்சரித்துள்ளார். அவர் கூறும்போது, “புதிதாக வருபவர்களைக் கண்டதும், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், பெரிய கதாநாயகியாக வருவீர்கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறி உசுப்பேற்றுவார்கள்.
உங்கள் திறமையைப் பற்றி கவலைப்படாமல், பாராட்டுவதற்காகவே சிலர் வருவார்கள். பிறகு, ‘அவரைப் போய் பாருங்கள், இவரைச் சந்தியுங்கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்புவார்கள். இதுதான் இங்கு நடக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள் சாக்லேட் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று சிறுவயதில் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை நினைவில் கொள்ளுங்கள்.
இங்கே கொடுக்கப்படுவது உண்மையான சாக்லேட் அல்ல; அது உங்கள் லட்சியங்களையும், ஆசைகளையும் முதலீடாகக் கொண்டு வீசப்படும் வலை. ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.
அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் மனரீதியாக உடைந்து, சொந்த ஊருக்கேத் திரும்பி விடுகிறார்கள். இப்படிச் சொல்வதன் மூலம் குறைந்த பட்சம் நான்கு பேரின் வாழ்க்கையையாவது காப்பாற்றினால் அதுவே எனக்கு போதும்” என்று தெரிவித்துள்ளார்.