பாலிவுட்

‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்

பிடிஐ

‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் தோற்றம் இருக்கும் போஸ்டர் கள்ளத்தனமாக இணையத்தில் வெளியானதில் தனக்கு வருத்தமே என நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார்.

"அவை அப்படி வெளியாகியிருக்கக் கூடாதுதான். இது ஒரு முக்கியமான படம். அந்த கதாபாத்திர தோற்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறையில் வெளியிட விரும்பினோம். அதைச் செய்வோம். ஆனால் அது இப்படி கள்ளத்தனமாக வராமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்போது என்ன செய்ய முடியும்.

எல்லோரிடமும் கேமரா இருக்கிறது. எவ்வளவுதான் நாம் கட்டுப்படுத்த முடியும். ‘பிகே’ படத்தில் கூட எனது தோற்றம் முதல் நாள் படப்பிடிப்பின்போதே வெளிவந்து விட்டது. இதை நான் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். அதுதான் யதார்த்தம்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரகசியமாக வைத்திருக்க முயற்சிக்கிறோம். வழக்கமாக, ரசிகர்கள் படப்பிடிப்பில் என்னை சந்திக்க வந்தால் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்வேன். ஆனால் ‘தக்ஸ்’ படத்தில் அதுகூட இல்லை. ஏனென்றால் படம் சமூக வலைதளத்தில் வந்துவிடும். படத்துக்கான தோற்றத்தில் இருக்கும் போது புகைப்படம் எடுக்கவும், படப்பிடிப்பு தளத்தில் எந்த புகைப்படம் எடுக்கவும் யாருக்கும் அனுமதி இல்லை. நாங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்" இவ்வாறு ஆமிர்கான் பேசியுள்ளார்.

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் க்ருஷ்ண ஆச்சார்யா இந்தப் படத்தை இயக்குகிறார். கேத்ரீனா கைஃப், ஃபாத்திமா சனா ஷேக் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். அமிதாப் பச்சனுடன் ஆமிர்கான் நடிப்பது இதுவே முதல் முறை.

SCROLL FOR NEXT