உலக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மேக்பத், ஒதெல்லோ, ஹேம்லெட் ஆகிய அழியாக் காவிய படைப்புகளை மக்பூல், ஓம்காரா, ஹைதர் என்று முறையே படங்களை எடுத்துச் சாதித்தவர் பாலிவுட் இயக்குநர் விஷால் பரத்வாஜ். இவர் ஷேக்ஸ்பியரின் இன்னொரு படைப்பான கிங் லியரை படமாக்கினால் கிங் லியர் பாத்திரத்துக்கு ரஜினிகாந்தையே தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளார்.
“ஹைதர் எடுக்கும் முன்பாக கிங் லியர் படத்துக்காகத்தான் பணியாற்றி வந்தேன். அப்போது கிங் லியர் பாத்திரத்துக்கு நடிகர் ரஜினிகாந்த்தைத்தான் நான் என மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தினேன். நான் கிங் லியரை படமாக்க முடிவெடுத்தால் அந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜின்காந்த்தையே முதலில் தேர்வு செய்வேன்” என்று பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு திரைப்பட விழாவில் இயக்குநர் விஷால் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களை ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்ட போது, மக்பூல் படம் எதேச்சையானதே. மற்ற இரண்டு படங்களை எடுத்தது ஒரு முத்தொகுதியைப் பூர்த்தி செய்யவே.
ஒதெல்லோவை ஓம்காரா என்று திரைவடிவமாக்கிய போது 3வது படத்தையும் எடுத்து மூன்றன் தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது என்கிறார் விஷால் பரத்வாஜ்.
இந்த மூன்று படங்களின் தொகுதியில் 3-வது படம் ஹைதர் எனக்கு சவாலாக அமைந்தது. முதல் 2 படங்களுக்கு இணையாக இது வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு கூடியது. அதே வேளையில் காஷ்மீர் பிரச்சினை பின்னணியில் இந்தப் படத்தை எடுக்க விரும்பினேன் என்றார் பரத்வாஜ்.
அவரது விருப்பப் பட்டியலில் ஷேக்ஸ்பியர் காமெடிகளையும் படமாக்கும் திட்டம் உள்ளது.