பாலிவுட்

’சீக்ரெட் பாலட்’ தழுவலா நியூட்டன்?- இயக்குநர் அனுராக் கஷ்யாப் சாடல்

ஸ்கிரீனன்

’சீக்ரெட் பாலட்’ தழுவல் 'நியூட்டன்' என்று வெளியான செய்தியை இயக்குநர் அனுராக் கஷ்யாப் கடுமையாக சாடியுள்ளார்.

அமித் மசூர்கார் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தில், ராஜ்குமார் ராவ், பங்கஜ் த்ரிபாதி, ரகுவீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்தீஸ்கரின் மோதல் நிறைந்த காடுகளில் நேர்மையாகத் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் அதிகாரி நியூட்டன் குமாரின் போராட்டத்தைப் பற்றிப் பேசும் படம் 'நியூட்டன்'.

2017-ம் ஆண்டில் இந்திய அரசின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 'சீக்ரெட் பாலட்' படத்தின் தழுவல் தான் 'நியூட்டன்', இதற்கு ஏன் ஆஸ்கர் விருது பரிந்துரை என பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இதற்கு இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் கஷ்யாப் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதவாது:

'நியூட்டன்' படத்தை 'சீக்ரெட் பாலட்'படத்தின் தழுவல் என சொல்லிக்கொண்டிருக்கும், ஆர்வமிகுதி ஊடகங்கள் மற்றும் அதீத கற்பனைத் திறன் கொண்ட திரை விமர்சகர்களுக்காக.. நியூட்டன் படத்தைப் பார்த்த பின், சீக்ரெட் பாலட் படத்தின் தயாரிப்பாளர் சொன்னதை இங்கு பகிர்கிறேன்.

நியூட்டன் பட இயக்குனரிடம் அப்படத்தின் இணைப்பை கேட்டு, அதை சீக்ரெட் பாலட் படத் தயாரிப்பாளருக்கு அனுப்பினேன்.. அவர் " படம் நன்றாக இருக்கிறது. (கதைக்கரு ஒன்று போல இருந்தாலும்) இது நிச்சயமாக எங்கள் சீக்ரெட் பாலட் படத்தின் தழுவல் அல்ல.." என்று பதிலளித்திருந்தார். அவரது கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு, "தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.. கதைத் திருட்டின் சிறு சாயல்கூட இதில் இல்லை" என்றார். அவர் சொன்னதன் ஸ்க்ரீன் ஷாட்.. இதோ!

இவ்வாறு அனுராக் கஷ்யாப் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT