சீனாவில் வெளியாகியுள்ள 'தங்கல்' திரைப்படம் 5 நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் 'தங்கல்'. 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது 'தங்கல்'.
தற்போது சீனாவில் இப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அங்கும் வசூலைக் குவித்து வருகிறது. சீனாவில் 'தங்கல்' வெளியான 5 நாட்களில் 123.67 கோடி வசூல் செய்திருப்பதாக பாலிவுட் திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 'தங்கல்' படத்தின் சாதனைகள் அனைத்தையும் 'பாகுபலி 2' முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.