ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படத்தில் ‘எதிரி நாடான பாகிஸ்தானையும் ஐஎஸ்ஐஎஸ்ஸையும் நல்ல முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ‘இந்தியன் பதான்’ என்பதே படத்திற்கு பொருத்தமான பெயராக இருக்கும்” என நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.220 கோடியை வசூலித்துள்ளது. இந்நிலையில், இந்தப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், “பதான் திரைப்படம் வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி என்று சொல்பவர்களின் கூற்றை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால், யார் வெறுப்பின் மீதான யாருடைய அன்பு? என்பதை துல்லியமாக ஆராய வேண்டும்.
யார் டிக்கெட்டுகளை வாங்கி படத்தை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்? ஆம், அதுதான் இந்தியாவின அன்பு. 80 விழுக்காடு இந்துக்கள் வசிக்கும் நாட்டில், எதிரி நாடான பாகிஸ்தானையும் ஐஎஸ்ஐஎஸ்ஐயும் நல்ல முறையில் காட்சிப்படுத்தியிருக்கும் பதான் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெறுப்பு, தீர்ப்புகளைக் கடந்த இந்த மனநிலைதான் இந்தியாவின் மகத்துவம். வெறுப்பு மற்றும் எதிரிகளின் அற்ப அரசியலை இந்தியாவின் அன்பு வென்றுள்ளது. இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்களாகவும், ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தானாக மாறாது, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பதான் படத்தின் கதைக்களத்தின்படி அதற்கு ‘இந்தியன் பதான்’ என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கங்கனாவை ட்விட்டரில் ட்ரால் செய்த ரசிகர் ஒருவர், “கங்கனா ஜி உங்களின் ‘தக்கட்’ திரைப்படம் முதல் நாளில் 55 லட்ச ரூபாய் மற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.2.58 கோடிதான் வசூலித்தது. ‘பதான்’ படம் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதானின் ஒருநாள் வசூல் கூட இல்லை உங்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல். இது உங்களின் விரக்தியைத் தவிர வேறில்லை" என பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கங்கனா, “ஆம், தக்கட் ஒரு வரலாற்று தோல்விதான். இதை நான் எப்போது மறுத்தேன்? பத்து வருடங்களில் ஷாருக்கானின் முதல் வெற்றிப் படம் இது. இந்தியா அவருக்கு வழங்கிய அதே வாய்ப்பு நமக்கும் வழங்கும் என்று நம்புகிறேன். எல்லாத்தையும் கடந்து இந்திய தாராளமானது, ஜெய் ஸ்ரீராம்” என தெரிவித்துள்ளார்.