சென்னை: இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் இந்த ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. ட்ரெய்லர் வெளியிடப்பட்ட 19 நிமிடங்களில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் தமிழ்ப் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார்.
ஷாருக்கான் உடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வரும் 25-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் சில வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதித்ய சோப்ரா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். விஷால் - சேகர் இணைந்து படத்திற்கான இசையை அமைத்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. பாலிவுட் சினிமா உலகில் அண்மைய காலமாகவே முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு வரவேற்பு கிடைக்காமல் உள்ளது. அதோடு சமூக வலைதளங்களில் அந்தப் படங்களை புறக்கணிப்பது தொடர்பான முழக்கங்களும் ஒலிக்கின்றன. இருந்தாலும் ஷாருக்கான் இந்தப் படத்துக்காக கொடுத்துள்ள உழைப்பை ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.
அதிரடி அக்ஷன் காட்சிகளில் அவர் கவனம் ஈர்க்கிறார். அதைப் பார்த்த பூரிப்பில், ‘நீங்கள் பாலிவுட்டை புறக்கணிக்கலாம். ஆனால், ஒருபோதும் ஷாருக்கானை புறக்கணிக்க முடியாது’ என அவரது புகழை ரசிகர்கள் பாடி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் ட்ரெய்லர் வெளியான 19 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை கடக்க காரணம். 1 மணி நேரத்தில் சுமார் 30 லட்சம் பார்வைகளை இது எட்டியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ லிங்க்..