'2.0' வெளியீட்டை முன்னிட்டு, 'கோல்மால் 4' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் படத்தை லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற '2.0' பர்ஸ்ட் லுக் விழாவில், 2017ம் ஆண்டு தீபாவளி வெளியீடு என்று படக்குழு அறிவித்தது.
இந்தி திரையுலகில் எப்போதுமே ஒரு படம் தொடங்கப்படும் போதே, வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'கோல்மால் 4' 2017 தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்தது.''
தற்போது '2.0' தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, 'கோல்மால் 4' தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதற்கு '2.0' படக்குழு நன்றியைத் தெரிவித்துள்ளது. "ரோஹித்ஜி, '2.0' படத்துக்கான உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. நீங்கள் ரஜினியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவர்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் லைக்கா குழுமத்தின் தலைமை படைப்பாக்கக் குழுத் தலைவர் ராஜூ மகாலிங்கம்.
'கோல்மால் 4' படத்தின் புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.