பிரபல இந்தி நடிகை ரிச்சா சதா. இவர், சமீபத்தில் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் கூறியதை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். அதில், "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்க அரசின் உத்தரவிற்கு காத்திருக்கிறோம். போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவுடன், ‘கல்வான் ஹாய் சொல்கிறது’ என்று தனது கருத்தைச் சேர்த்திருந்தார் ரிச்சா.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ராணுவத்தையும் 2020-ல் சீனப் படைகளுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களையும் அவமதித்ததாக அவரை விளாசினர். நடிகர் அக்ஷய் குமார், ‘நமது ஆயுதப் படைகளை விமர்சிப்பது வேதனையை தருகிறது. அவர்களால்தான் நாம் இங்கு இருக்கிறோம்’ எனக் கூறியிருந்தார். விவகாரம் பெரிதானதால், ரிச்சா மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ரிச்சாவின் பதிவுக்கு எதிராக, இந்திப்பட இயக்குநர் அசோக் பண்டிட் ஜுஹூ போலீஸில் புகார் அளித்துள்ளார்.