பாலிவுட்

‘காந்தாரா’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: கங்கனா ரணாவத்

செய்திப்பிரிவு

கன்னடத்தில் உருவான 'காந்தாரா' படத்தை அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக அனுப்ப வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரா'. தொடக்கத்தில் கன்னடத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''காந்தாரா படம் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இந்திய நுழைவாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இந்த ஆண்டு இன்னும் முடியவில்லை என்பதும், இன்னும் நல்ல படங்கள் வரலாம் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், ஆஸ்கர் விருதைக் கடந்து இந்தியாவுக்கு உலக அளவில் சரியான பிரதிநிதித்துவம் தேவை. மர்மங்கள் மற்றும் ஆன்மிகம் நிறைந்த இந்த நிலத்தை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது மாறாக தழுவிக்கொள்ள மட்டுமே முடியும்.

இந்தியா ஓர் அதிசயம் போன்றது, நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் விரக்தியடைவீர்கள். ஆனால், அதன் அதிசயங்களில் சரணடைந்தால் நீங்களும் ஒன்றாக இருக்கலாம். காந்தாரா என்பது ஓர் அனுபவிக்கக்கூடிய யதார்த்த உலகம்'' என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT