நடிகர் ஷாருக்கான், அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் சுமார் 30 நாட்கள் நடைபெற்றது.
படப்பிடிப்பு முடிந்ததும் தனது சென்னை ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார் ஷாருக்கான். இதுபற்றி சுதிர் கோதாரி என்ற ரசிகர் கூறும்போது, “ஷாருக்கானை சந்திக்க வேண்டும் என்று அவர் மானேஜரிடம் கேட்டோம். கடந்த 8-ம் தேதி அழைப்பு வந்தது. 20 ரசிகர்களை மட்டும் சந்திக்க, ஷாருக்கான் அனுமதித்துள்ளார் என்றும் அவர் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வரும்படியும் அழைத்தனர். அங்கு எங்களுக்காக 2 அறைகளை ஒதுக்கி இருந்தனர். சிறப்பான விருந்து பரிமாறப்பட்டது. பிறகு ஷாருக்கான் எங்களைச் சந்தித்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் கொடுத்த பரிசையும் பெற்றுக்கொண்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தார்.