பாலிவுட்

மீண்டும் ‘ஹவுஸ்புல்’ - தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, கடந்த 16-ம் தேதி திரையரங்க டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும் என்று இந்திய மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. அப்போது, ‘பிரம்மாஸ்திரா’ நன்றாக ஓடிக்கொண்டிருந்ததால், அதன் வசூல் பாதிக்கப்பட வேண்டாம் என்று 23-ம் தேதிக்கு சினிமா தினத்தைத் தள்ளி வைத்தனர். பிவிஆர், ஐநாக்ஸ் உட்பட பல மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் இதை நடத்தின. இந்தக் கட்டணக் குறைப்பு தென்னிந்தியாவில் இல்லை.

ரூ.200, ரூ.300 என்று டிக்கெட் கட்டணம் இருப்பதால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது. இந்த டிக்கெட் கட்டணக் குறைப்பு, அதிகமான ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வரும் என்று நம்பினர். நினைத்தது போலவே, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் பல திரையரங்குகளில் வழக்கத்தை விட முன்பதிவு அதிகமாக நடந்தது. 50 சதவிகித டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்பே, விற்றுத் தீர்ந்துவிட்டன.

வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரையரங்குகளில் படம் பார்த்துள்ளனர். பல தியேட்டர்களில் 6 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. ரூ.75 கட்டணத்தில் படம் பார்த்துவிட்டு வந்த நொய்டாவைச் சேர்ந்த பிரியா ஜெய்ஸ்வால் (19) என்பவர் கூறும்போது “இந்த கட்டணத்துக்கு எந்த படமும் எங்களுக்கு போதுமானதுதான். இந்த முறை, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ‘எந்தப் படத்துக்கு புக் பண்ணப் போற?’ என்ற கேள்வி தோழிகளுக்குள் எழவே இல்லை. எந்த படம் என்றாலும் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்’’ என்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் ஹவுஸ்புல்லாகி இருப்பது, உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. டிக்கெட் கட்டணத்தைக் குறைத்தால் அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள்.

SCROLL FOR NEXT