தென்னிந்திய திரையுலகம் தன்னை ஊக்கப்படுத்துவதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற சைமா திரைப்பட விருது வழங்கும் விழாவில், 'தென்னிந்தியாவில் விரும்பப்படும் இந்தி நடிகர்' என்ற பிரிவில் ரன்வீர் சிங்குக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரன்வீர் சிங், ''ஒரு கலைஞனாக இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்வதற்காக எனக்குப் பிடித்ததை செய்கிறேன். என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டதற்கு அன்பும் நன்றியும்.
உலகத்திலேயே பன்முகத்தன்மை கொண்ட நாடு நம் நாடுதான். எல்லாவற்றிற்கும் மேலாக நம் நாட்டிலுள்ள பன்முகத்தன்மை கலாசாரத்தை நான் நேசிக்கிறேன். ஒவ்வொரு மாநிலமும் அதன் கலாசாரத்தில் செழுமையையும், துடிப்பையும் கொண்டுள்ளது, ஒரு மக்களாகிய நாம் அதைக் கொண்டாட வேண்டும். இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி இது.
ஒரு காலத்தில் மொழி பெரும் தடையாக இருந்தது. நாம் அப்படியான ஒரு காலத்தில் வாழவில்லை என்பது சிறப்பானது'' என்றார். மேலும், தென்னிந்திய திரைப்படங்கள் தன்னை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.