அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள தெலுங்கு படம் இந்தியில் வசூல் குவித்து வருகிறது. தென்னிந்திய படங்களான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, ‘கேஜிஎஃப் 2’,ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’, ரவிதேஜாவின் கில்லாடி, கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படங்கள் இந்தி சினிமாவிலும் வசூலைக் குவித்தன. பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான படங்களில் ‘பூல் புலையா 2’ படம் மட்டுமே வசூல் அள்ளியது. மற்றப் படங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி வெளியான ‘லால் சிங் சத்தா’, ‘ரக்ஷா பந்தன்’, வெள்ளிக்கிழமை வெளியான தாப்ஸி நடித்த ‘தோ பாரா’ படங்களை பின்னுக்குத் தள்ளி, மற்றுமொரு தென்னிந்திய படமான ‘கார்த்திகேயா 2’ வசூல் குவித்து வருகிறது.
கடந்த 13-ம் தேதி வெளியான இந்த தெலுங்கு படத்தில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், அனுபம் கெர் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்து மொண்டேடி இயக்கியுள்ளார்.
இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்ட இந்தப் படத்துக்கு முதல் நாளில் 50 காட்சிகள் மட்டுமே கிடைத்தன. பின்னர் ரசிகர்களின் வரவேற்பால், இப்போது ஆயிரம் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.