'லால் சிங் சத்தா' திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் சுமார் ரூ.19 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான் நடித்துள்ள படம் 'லால் சிங் சத்தா'. 'ஃபாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ மறு ஆக்கமான இந்தப் படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியான இந்தப் படம் முதல் நாள் வசூலாக 11.70 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகின. கடந்த 13 ஆண்டுகளில் ஆமீர்கானின் படத்துக்கு கிடைத்த மோசமான ஓப்பனிங் இது என்றும் பாலிவுட் வர்த்தக நிபுணர்களால் கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்று படம் ரூ.7.26 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களில் ரூ.18.96 கோடியை படம் ஈட்டியிருக்கிறது. 'லால் சிங் சத்தா'வின் இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை ஒப்பிடுகையில் 20% குறைந்துள்ளது.
அக்ஷய் குமார் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கிய படம் 'ரக்ஷா பந்தன்' வெளியானது. அண்ணன் - தங்கை பாசத்தை வலியுறுத்தும் குடும்பக் கதையை களமாகக் கொண்ட இப்படத்தின் முதல் நாள் ரூ.8.20 கோடி வரை வசூலித்தது. இரண்டாம் நாளான நேற்று ரூ.6.40 கோடி என வசூல் குறைந்ததுள்ளது. மொத்தம் படம் ரூ.14.60 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரை அக்ஷய் குமார் படங்கள் குறைந்த வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.