பாலிவுட்

வாழ்வின் மோசமான சூழலில் இருக்க விரும்பவில்லை: தீபிகா படுகோன் உருக்கம்

ஏஎன்ஐ

'என் வாழ்வின் மோசமான சூழலில் நான் இருக்க விரும்பவில்லை. அதை விட்டு வெளியே வர வேண்டும் என முயற்சித்தேன்' என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை தீபிகா படுகோனே அழுதபடி பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, மனநலம் குறித்த 'தோபாரா பூச்சோ' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது தனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப் பேசுகையில் தீபிகா கண்ணீர் விட ஆரம்பித்தார். தனது வாழ்வின் மோசமான கட்டத்தில் தன்னை ஆதரித்த தன் அம்மாவுக்கு நன்றி தெரிவித்தார்.

வழியும் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டே தீபிகா படுகோனே பேசியதாவது, "இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது குடும்பத்தினர் என்னைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் கிளம்புவதற்கான ஆயத்தங்களில் இருக்கும்போது நான் எனது அறையில் தனியாகப் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது அம்மா அருகில் வந்து எதுவும் பிரச்சினை இல்லைதானே எனக் கேட்டார். நான் இல்லை என்றேன். மீண்டும், எனது வேலையிலோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ என்னை கவலைக்குள்ளாக்குகிறதா எனக் கேட்டார். இல்லை என்றேன். மீண்டும் பல முறை அவர் என்னைக் கேட்க ஒரு கட்டத்தில் என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன்.

என் அம்மா இல்லை என்றால் இன்று இந்த இடத்தில் நான் இல்லை என்பதை அவரிடம் சொல்ல விரும்புகிறேன். என்னுடன் இருந்ததற்கு நன்றி. எனது சகோதரி, என் அப்பா, என் நண்பர்கள் என என்னை அரவணைத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்வின் மோசமான சூழலில் நான் இருக்க விரும்பவில்லை. அதை விட்டு வெளியே வர வேண்டும் என முயற்சித்தேன். அனைத்து தீர்வுகளும் நமக்குள்தான் இருக்கிறது என்பார்கள். அதைப் போல எனக்குள் இருக்கும் உறுதியை கண்டுகொண்டேன். அதே போல என்னைச் சுற்றி இருந்தவர்களும் எனது நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர்" என்று தெரிவித்தார் தீபிகா.

SCROLL FOR NEXT