இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திய சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'எம்.எஸ்.தோனி: தி அன் டோல்டு ஸ்டோரி', வெளியாகி முதல் வார இறுதியில் இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 66 கோடியை வசூலித்துள்ளது.
இதுகுறித்து திரையுலகில் வெளியான தகவலின்படி, படம் வெளியான (செப்டம்பர் 30) வெள்ளிக்கிழமை அன்று ரூ. 21.3 கோடியும், அடுத்த நாளில் ரூ. 20.6 கோடியும் வசூலாகியுள்ளது. அத்தோடு ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ. 24.10 கோடி வசூல் செய்துள்ளது தோனி திரைப்படம்.
ஆக, மூன்று நாட்களில் திரைப்படம் ரூ. 66 கோடியை வசூலித்துள்ளது. இதனால் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'சுல்தான்' படத்துக்குப் பிறகு, வார இறுதியில் அதிகம் வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இப்படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.
நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தும்,. சாக்ஷி கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.