பாலிவுட்

சாம்ராட் பிருத்விராஜை விட குறைவாக வசூலித்த ஷம்ஷேரா - பாலிவுட்டின் தொடர் சோகம்

செய்திப்பிரிவு

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஷம்ஷேரா' திரைப்படம், அண்மையில் வெளியான அக்சய்குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ்' படத்தை விட மோசமான வசூலை குவித்துள்ளது.

கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்வீர்கபூர் நடிப்பில் வெளியான படம் 'ஷம்ஷேரா'. இந்தப்படத்தில் வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த 22-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பல நாட்கள் படப்பிடிப்புக்கு பின் வெளியான இப்படம் முதல் நாள் வெறும் 10.24 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. அக்சய் குமாரின் 'சாம்ராட் பிருத்விராஜ்' முதல்நாள் 10.70 கோடியை வசூலித்திருந்தது.

'ஷம்ஷேரா 2வது நாள் வசூலும் 10 கோடி ரூபாயை ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிக அதிக திரையரங்குகளில் அதாவது 4 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியான போதும், எதிர்பார்த்த வசூல் வராமல் போயிருப்பது படக்குழுவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் இந்த வசூல் நிலவரம் வரும் நாட்களில் இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகிறது.
மேலும், பல திரையரங்குகளிலிருந்து படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் படங்கள் வசூலில் மிக மோசமான இடத்தை பிடித்து வருகின்றன. இந்தப்படம் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அதுவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அடுத்து ரன்வீர்கபூரின் 'பிரமாஸ்திரா' 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. இந்தப்படம் பாலிவுட்டின் துயரத்தை நீக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT