பாலிவுட்

நட்சத்திர விடுதியில் போதைப் பார்ட்டி: நடிகர் சித்தார்த் கபூர் கைது

செய்திப்பிரிவு

கர்நாடகா மாநில பெங்களூருவில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த போதை பார்ட்டியில் பாலிவுட் பிரபலம் ஷக்தி கபூரின் மகனும் நடிகருமான சித்தார்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹலசூரு போலீஸார் தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்றிரவு (ஞாயிறு இரவு) 5 நட்சத்திர விடுதி ஒன்றில் ரெய்டு நடத்தினர். அங்கே 35 பேர் பார்ட்டி நடத்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்கள் அனைவரையும் போலீஸார் காவலில் எடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் 5 பேரின் ரத்த மாதிரிகளில் போதை மருந்து உட்கொண்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

அந்த ஐந்து பேரில் பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தார்த் கபூரும் ஒருவர். அவரை மேற்கொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஏற்கெனவே சக்தி கபூரின் மகள் ஷ்ரத்தா கபூர் போதைப் பொருள் வழக்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணத்திற்குப் பின்னர் பாலிவுட்டில் போதைப் பொருள் சர்ச்சை எழுந்தது. அப்போது பாலிவுட் பிரபலங்கள் பலரும் விசாரிக்கப்பட்டனர்.

மும்பையில் ஒரு சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் கலந்து கொண்டதாக, போதைப் பொருளை பயன்படுத்தியும், விநியோகமும் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலையானார்.

SCROLL FOR NEXT