“நான் சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன்” என்று பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
'விராட பர்வம்' (Virata Parvam) என்கிற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார் பிரபல நடிகை சாய் பல்லவி. வேணு இயக்கியுள்ள இப்படத்தில் ராணா டக்குபதி, சாய் பல்லவி, ஈஸ்வரி ராவ், ப்ரியா மணி, நிவேதா பெத்துராஜ், நந்திதா தாஸ் போன்றோர் நடித்துள்ளனர். 1990-களில் நக்சலைட்கள் நிகழ்த்திய உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் ஜூலை 1ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவித்த தேதிக்கு முன்பாகவே வெளியாக இருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் 17 தேதி 'விரதபர்வம்' திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'விராட பர்வம்' படத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர், ''உங்களின் இந்த லுக் அருமையாக உள்ளது ராணா. படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். ட்ரெய்லர் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் ஆர்வமூட்டும் விதமாகவும் உள்ளது. நீங்கள் அபாரமாக இருக்கிறீர்கள். நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்'' என்று பதிவிட்டுள்ளார்.