பாலிவுட்

கொலை மிரட்டல் எதிரொலி: சல்மான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

மும்பை: பஞ்சாபில் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ் வாலாவின் நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட் டுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகராக விளங்குபவர் நடிகர் சல்மான் கான். இவர், தன் குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சல்மான் கானின் தந்தையான சலீம் கான் தினமும் நடைப்பயிற்சிக்காக பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வாறு செல்லும்போது அங்குள்ள ஓர் இருக்கையில் வழக்கமாக அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். சலீம் கானுடன் அவரின் பாதுகாப்புக்கு 2 பாதுகாவலர்கள் தினந்தோறும் செல்வது வழக்கம்.

அவ்வாறு நேற்று நடைப்பயிற்சிக்கு செல்லும்போது சலீம் கான், வழக்கமாக அமரும் இருக்கையில் கடிதம் ஒன்று இருப்பதைப் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார். அந்தக் கடிதத்தில் சல்மான் கான், சலீம் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ``பாடகர் சித்து மூஸ் வாலாவின் நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக பாந்த்ரா போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சலீம் கான் கண்டெடுத்த கடிதத்தில் ஜி.பி. என்றும், எல்.பி. என்றும் எழுதப்பட்டுள்ளது. அதில் ஜி.பி. என்பது கோல்டி பிரார் என்றும் எல்.பி என்பது சிறையில் உள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் என்பதை குறிக்கும் வகையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து கடிதம் தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த கொலை மிரட்டல் சம்பவத்தைத் தொடர்ந்து சல்மான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்மையில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா, சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT