போபால்: பான் மசாலா விளம்பர படங்களில் நடிக்கும் பாலிவுட் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுவது வழக்கம். சமீபத்தில் நடிகர் அக்ஷய் குமார் இது குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். இந்த நிலையில், விமர்சனங்களைத் தாண்டியும் வட இந்தியாவில் சில நடிகர்கள் பான் மசாலா விளம்பரங்களை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக அஜய் தேவ்கன், ஷாரூக் கான் மீது தொடர்ந்து இம்மாதிரியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மாணவி ஒருவர், பாலிவுட் பிரபலங்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கர்காவ் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயதான மாணவி தட்கன். இவர் சமீபத்தில் ஷாரூக் கான், அஜய் தேவ்கன் இருவருக்கும் ரூ.5 மணி ஆர்டருடன் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அக்கடிதத்தில், “உங்கள் கையிலிருந்து ஒரு பான் மசாலா பாக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காவே நான் உங்களுக்கு 5 ரூபாய் மணி ஆர்டரை செய்துள்ளேன். நீங்கள் இருவரும் எனக்கு பிடித்த நடிகர்கள். ஆனால் நீங்கள் பான் மசாலாவை விளம்பரம் செய்கிறீர்கள் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நான் அளித்த பணத்திற்காக நீங்கள் இப்போது எனக்கு பான் மசாலாவை அனுப்புங்கள்... நானும் அதை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறேன்.
நான் இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே ட்வீட் செய்தேன். ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை. இதனால் சகோதர - சகோதரிகளுக்கான சிறப்பு நாளில் இந்த கடிதத்தை உங்கள் இருவருக்கும் எழுதுகிறேன். எனக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. நான் உங்கள் இருவரை எனது பெரிய அண்ணன்களாக பார்க்கிறேன். அதனால்தான் உங்களை பான் மசாலாக்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பான் மசாலாக்கள் ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன. நீங்கள் இருவரும் இந்தியாவின் அடையாளமாக உள்ளீர்கள். உங்களை இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள்” என்று அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.