'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கம் 
பாலிவுட்

செலவு ரூ.15 கோடி... வசூல் ரூ.250 கோடி: வர்த்தகத்திலும் சாதனை படைக்கும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடுமுழுவதும் பெருமளவு பேசுபொருளான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கரோனா தொற்று காலத்துக்கு பிறகு வெளியான திரைப்படங்களில் சூப்பர் ஹிட் வசூல் செய்துள்ளது. வெறும் 15 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த இந்தி திரைப்படம் தற்போது வரையில், உள்நாட்டில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த மாதம் மார்ச் 11-ம் தேதி விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெளியானது. 1990களில் காஷ்மீரில் பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. படம் வெளியானது முதல் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

படம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் படத்திற்கு வரி விலக்கு அளித்தன. அசாம் அரசு படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையையும் அறிவித்தது.

விமர்சன ரீதியாக பெருமளவில் பேசும் பொருளாக இந்த படம் இருந்தது. ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பிலான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. பிரதமர் தொடங்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த படத்தை பற்றி பேசினர். ஒரு சில நாட்கள் தொலைக்காட்சி விவாத தலைப்பாகவும் இந்த திரைப்படம் மாறியது.

பிரதமர் மோடியுடன் படக்குழுவினர்

இந்தநிலையில் வசூலிலும் இந்த படம் சாதனை படைத்துள்ளது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பாக்ஸ் ஆபிஸில் பல முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் ரூ.250 கோடி ரூபாயை தாண்டி வர்த்தகம் செய்த திரைப்படம் என்ற சாதனையை எட்டியுள்ளது. இப்படம் வெறும் ₹15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகும்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘‘#TheKashmirFiles கரோனா தொற்றுக்கு பின்பு ரூ.250 கோடியைத் தாண்டிய முதல் இந்தித் திரைப்படம். இந்த வார இறுதியில் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் திரைக்கு வராத நிலையில் வேறு சில திரைப்படங்கள் இருந்தபோதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 வாரத்தை கடந்த பிறகும் கூட இந்த படம் வணிக ரீதியாக வளர்ச்சி கண்டுள்ளது. 5-வது வார இறுதியில் வெள்ளி ரூ.50 லட்சம், சனி ரூ.85 லட்சம், ஞாயிறு ரூ.1.15 கோடி வர்த்தகம் செய்துள்ளது. மொத்தமாக ரூ.250.73 கோடி என்ற அளவில் வர்த்தகமாகியுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ.250 கோடி தொற்றுநோய்க்குப் பிந்தைய அனைத்து இந்திய வெளியீடுகளுக்கும் மேலாக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கூடுதல் வெற்றி கண்டுள்ளது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் ரூ.200 கோடியைத் தாண்டிய ஒரே ஒரு இந்திப் படம் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் ஹிந்தி டப்பிங் பதிப்பு மட்டுமே.

உள்நாட்டில் ரூ. 250 கோடி தவிர காஷ்மீர் பைல்ஸின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.337.23 கோடியாகும். இந்த அளவீடுகளிலும் கரோனா தொற்று பரவலுக்கு பின்பு ரூ.300 கோடி தடையைத் தாண்டிய ஒரே இந்தித் திரைப்படமாக உள்ளது.

இதற்கு முன், சூர்யவன்ஷி, கரோனா தொற்றுநோய் காலத்தில் அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படமாக இருந்தது. மொத்த வருவாய் ரூ.293 கோடி. அதேசமயம் ஆர்ஆர்ஆர் உலகளாவிய வர்த்தகத்தில் ரூ.1029 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளது.

ஆனால் இந்த வருவாயில் பெரும்பகுதி என்பது இந்தியில் அல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகள் மூலம் வந்துள்ளது. காஷ்மீர் பைல்ஸ் மற்ற மொழிகளிலும் வெளியாகும்போது இந்த வர்த்தக சாதனைகளை முறிடிக்கக் கூடும்.

SCROLL FOR NEXT