மும்பை: வில் ஸ்மித் மனைவிக்கு இருக்கும் அலோபீசியா என்ற நோய் பாதிப்பு தனக்கும் இருந்ததாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
94-வது ஆஸ்கர் அகாடமி விருது விழாவின்போது வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் பற்றி நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் உருவக் கேலியாக பேசியது சர்ச்சையானது. முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற நோய் தொற்றால் பிங்கெட் ஸ்மித் போராடி வருவதால், அவர் மொட்டையடித்திருந்தார். அவரது தோற்றத்தைக் குறிப்பிட்டு கிறிஸ் ராக் உருவக் கேலி பேசியிருந்தார்.
இதனிடையே, ஜடா பிங்கெட் போன்று தனக்கும் அலோபீசியா நோய் தோற்று கண்டறியப்பட்டது என்று நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். "2016-ல் எனக்கும் அது கண்டறியப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் என் தலையில் முடிகள் உதிர்ந்து மூன்று இடங்களில் வழுக்கை போன்று இருப்பதைப் பார்த்தேன். உண்மையில் அதனை சமாளிக்க மிகவும் கடினமாக இருந்தது.
Alopecia Areata தொற்று வந்தால், அது உங்களை நோயுறச் செய்யாது. மேலும், இது தொற்றுநோயாகவும் இல்லை. ஆனாலும், அதை ஏற்றுக்கொள்வது உணர்வு ரீதியாக முடியாத ஒன்றாக இருந்தது. இதற்கு சிகிச்சை இருக்கிறது. இந்த சிகிச்சையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முடி வளரக்கூடும் என்பதை மருத்துவர்கள் என்னிடம் உறுதிப்படுத்தினார்கள்.
ஒரு நபருக்கு Alopecia Areata வருவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. இப்போது நான் ஆரோக்கியமான கூந்தலை கொண்டிருந்தாலும், என் வாழ்வில் எந்த நேரத்திலும் அது மீண்டும் வரக்கூடும் என்பதை அறிந்து வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.