வீர் சாவர்க்கர் பயோபிக் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வந்துள்ளது. மகேஷ் மஞ்ச்ரேக்கர் இந்தப் படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சுதந்திர வீர் சாவர்க்கர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர், ரன்தீப் ஹூடா சாவர்க்கர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் பண்டிட் மற்றும் சந்தீப் சிங் என்ற இருவர் படத்தை தயாரிக்கின்றனர். இவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
இதனை வெளியிட்டுள்ள ரன்தீப் ஹூடா, "சில கதைகள் சொல்லப்படுகின்றன, சில வாழ்கின்றன. சாவர்க்கர் பயோபிக் படத்தின் ஒருபகுதியாக இருக்கப்போவதை நினைத்து பெருமையாகவும், உற்சாகமாகவும் உள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க பலர் பங்காற்றியுள்ளனர். இருப்பினும், அனைவருக்கும் அதற்கு உண்டான மரியாதை கிடைக்கவில்லை. வீர் சாவர்க்கர் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர். அவர் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அறியப்படாத அவருடைய கதையைச் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்ற போவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இது மற்றொரு சவாலான பாத்திரமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் பேசும்போது, "புறக்கணிக்கப்பட்ட கதைகளைச் சொல்ல இதுவே சரியான நேரம். 'சுதந்திர வீர் சாவர்க்கர்' கதை நம்முடைய வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரன்தீப் ஹூடா சாவர்க்கர் கெட் அப்பில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.