‘சக்திமான்’ கேரக்டரை மையமாக வைத்து சூப்பர்ஹீரோ படம் ஒன்றை மூன்று பாகங்களாக உருவாக்கவுள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தொடர் 'சக்திமான்'. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்று அறியப்படும் 'சக்திமான்' செப்டம்பர் 1997-ம் ஆண்டு ஆரம்பித்து மார்ச் 2005-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தத் தொடர் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மற்ற தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் சக்திமான் கதாபாத்திரத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சியில் சோனி நிறுவனம் இறங்கியுள்ளது. சக்திமான் பாத்திரத்தை மையமாகக் கொண்டு சூப்பர்ஹீரோ படம் ஒன்றை சோனி நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கான ப்ரோமோ டீசர் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் சக்திமானாக பிரபல பாலிவுட் ஒருவரை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.