பாலிவுட்

விரைவில் ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ - உறுதி செய்த சல்மான் கான்

செய்திப்பிரிவு

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ இரண்டாம் பாகத்தை சல்மான் கான் உறுதி செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. கபீர் கான் இயக்கிய இப்படத்தில் கரீனா கபூர், நவாசுத்தீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்துக்கு எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியிருந்தார்.

இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் ராஜமௌலி, கே.வி.விஜயேந்திர பிரசாத், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சல்மான்கான் பேசும்போது தான் நடித்ததில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தை குறிப்பிட்டு பேசினார். அப்படத்துக்காக கே.வி.விஜயேந்திர பிரசாத்துக்கு நன்றியும் தெரிவித்தார். அப்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குநர் கரண் ஜோஹர், “அப்படியென்றால் இதை அடுத்த பாகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று சல்மான் கானிடம் கேட்டார். அதற்கு சல்மான் கான் “ஆம்” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படம் தொடர்பான ஹாஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகின.

SCROLL FOR NEXT