பிஹாரில் நடந்த சாலை விபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 5 பேர் உட்பட 6 நபர்கள் உயிரிழந்தனர்.
பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நேற்று இந்த சாலை விபத்து நடந்தது. ஹரியாணா மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங்கின் சகோதரி கீதா தேவி மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் பாட்னாவிலிருந்து காரில் ஜமுய் பகுதிக்குச் சென்றனர். இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் நேற்று காலை அவர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சிகாந்த்ரா-ஷேக்புகார நெடுஞ்சாலையில் ஹல்சி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கார் வந்தபோது, எதிரே காலி சமையல் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியுடன் மோதியது.
இந்த கோர விபத்தில் காரிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் லலித் சிங், அவரது மகன்கள் அமித் சேகர், ராம் சந்திர சேகர், மகள் பேபி தேவி, அனிதா தேவி ஆகியோரும் மற்றொருவர் டிரைவர் பிரீத்தம் குமார் என்றும் தெரியவந்துள்ளது. போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங்கின் மைத்துனர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பது குறிப்பிடத்தக்கது.
2020-ம் ஆண்டு, ஜூன் 14-ம் தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் சுஷாந்த் சிங் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவரது குடும்பம் மீளாத நிலையில் மேலும் ஒரு சோக சம்பவம் தற்போது நடந்துள்ளது.