பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஊர்மிளா மடோன்கர் (47). இவர் தமிழில் 'இந்தியன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து 1994-ல் வெளியான 'ரங்கீலா' திரைப்படம், இந்தியா முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் ஊர்மிளா நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊர்மிளாவுக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை ஊர்மிளா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தான் நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கரோனா பரிசோனை செய்து கொள்ளுமாறும் ஊர்மிளா கேட்டுக் கொண்டுள்ளார்.