பாலிவுட்

'அலா வைகுந்தபுரம்லோ' இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

செய்திப்பிரிவு

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகப் பல்வேறு சாதனைகளையும் உடைத்தது. அல்லு அர்ஜுனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயர் பெற்றது.

இந்தியா முழுக்கவே பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரைப் பாராட்டியுள்ளனர். இதனால், இதன் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், ராதா கிருஷ்ணா, அமன் கில் மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோர் தயாரிக்கப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்து, இன்று (அக்டோபர் 13) முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 'ஷெஸாடா' என்று இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ப்ரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனை ரோஹித் தவான் இயக்கி வருகிறார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT