ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீஸார் கைது செய்தனர். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி ரியான் தோர்பேயும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிகையை போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனிடையே, தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே ஆகியோர் ஜாமீன் கேட்டு மும்பை முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில், ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போலீஸார் ஒரு ஆதாரங்களை கூட குற்றப்பத்திரிகையில் கூறவில்லை. இதேபோல் வழக்கில் ராஜ் குந்த்ரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மும்பை முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.பி. பாஜிபலே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சொத்துப் பத்திரத்தை தாக்கல் செய்து ஜாமீனில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். அதைப் போலவே ரியான் தோர்பேவுக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார். இதையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு இருவரும் நேற்று ஆர்தர் சாலை சிறைச்சாலையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.