அபிஷேக் பச்சனுக்குத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் பல்வேறு விருதுகளை வென்றது.
தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக் தயாராகி வருகிறது. இதில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார்.
'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக் குறித்து முதல் முறையாக ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் அபிஷேக் பச்சனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:
"6.3 உயரத்தில் ஒரு சிறுவன். இன்னும் உயரிய அப்பாவுக்குக் குழந்தை. உலகப் புகழுக்கு மகனாகவும், உலக அழகிக்குக் கணவனாகவும், தானிருக்கும் அனுபவத்தைத் தானியங்கி இயந்திரமாய் தட்டிவிட்டாரென்றால் ரசிக்கலாம்-மணிக்கணக்கில்! முதலில் இப்படி ஒரு படத்தைத் தேர்வு செய்ததும், தானே தயாரிப்பதும் ரசனை.
பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் >மிஸ்டர். அபிஷேக் பச்சன்!!! பாதிப் படம் கடந்துவிட்டேன். எனக்கே முதல் இந்தி > என்னுடன் ராம்ஜி (ஒளிப்பதிவாளர்), சத்யா(இசை) சுதர்சன்(எடிட்டர்) என்று தமிழ் அள்ளிப் போகிறேன்!".
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.