ஆபாசப் பட வழக்கில் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
ஆனால் ராஜ் குந்த்ரா எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அல்ல, அவை பாலுணர்வைச் சொல்லும் கலையம்சம் கொண்டவை என்றும், எனவே ஆபாசப் படம் எடுத்திருப்பதாக அவரைக் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டுவந்தார். மேலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ஹாட்ஷாட்ஸ் மற்றும் பாலி ஃபேம் ஆகிய ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமான செயலிகளிலிருந்து 51 ஆபாசப் படங்களை மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ராஜ் குந்த்ராவுக்கும், லண்டனில் இருக்கும் அவரது மைத்துனர் பிரதீப் பாக்ஷிக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜ் குந்த்ராவுக்கு எதிராக வழக்கில் ஆதாரங்கள் வலுவாக உள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஏ.எஸ்.கட்கரி கூறியதாவது: ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டதும் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதும் முழுமையாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்துள்ளது. கைது தொடர்பாக போலீஸார் வாரண்ட் அளிக்க முயன்றபோதெல்லாம் ராஜ் குந்த்ரா தான் அதனை வாங்க மறுத்திருக்கிறார். ஆகையால் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதே. ஆகையால் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதனால், ராஜ்குந்த்ராவின் ஆர்தர் ரோடு சிறைவாசம் தொடர்கிறது.