'பெல் பாட்டம்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.
இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், திரையரங்குகளைத் திறப்பதில் தாமதமாவதால் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கவே, திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது. ஜூலை 27-ம் தேதி வெளியாகும் என்று வெளியீட்டுத் தேதியையும் அறிவித்தார்கள். ஆனால், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் திரையரங்குகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜூலை 27-ம் தேதி திட்டமிட்டப்படி 'பெல் பாட்டம்' வெளியாகவில்லை.
தற்போது டெல்லியில் உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. இதனால் 'பெல் பாட்டம்' படக்குழுவினர் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது படக்குழு. கரோனா 2-வது அலை முடிந்தவுடன் வெளியாகும் பெரிய நடிகரின் படமாக 'பெல் பாட்டம்' அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலமாக திரையரங்க வியாபாரம் முன்னுக்கு வருமா என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.