பாலிவுட்

'ரங் தே பஸந்தி'யில் நடிக்கத் தேர்வான டேனியல் க்ரெய்க்: நினைவுகள் பகிர்ந்த இயக்குநர்

பிடிஐ

'ரங் தே பஸந்தி' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரெய்க் தேர்வானது குறித்து, அப்படத்தின் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு, ஆமிர் கான், சித்தார்த், மாதவன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'ரங் தே பஸந்தி'. இந்தப் படத்தில் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய கதாபாத்திரங்களைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் க்ரெய்க் தேர்வானார்.

இதுகுறித்து இயக்குநர் மேஹ்ரா தனது சுயசரிதையான 'தி ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிர்ரர்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

''பிரிட்டன் திரைத்துறையில், ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய டேவிட் ரீட் மற்றும் ஆடம் போவ்லிங் இருவரும் இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். 'ரங் தே பஸந்தி' திரைக்கதையில் அதிக நம்பிக்கை கொண்ட இந்த இருவரும், தாங்கள் இருந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, இந்தப் படத்தின் பணிகளை ஒருங்கிணைத்து நடத்த இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர்.

'ரங் தே பஸந்தி' படத்தில் ஆலிஸ் பேட்டன், ஸ்டீவன் மெகிண்டோஷ் ஆகிய இரண்டு ஆங்கில நடிகர்கள் நடிக்கக் காரணமாக இருந்ததும் இவர்கள்தான். இவர்கள் மூலமாகத்தான் டேனியல் க்ரெய்க்கும் ஒரு கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வுக்கு வந்தார்.

பகத் சிங் மற்றும் நண்பர்களை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லும் ஜேம்ஸ் மெக்கின்லே என்கிற ஜெய்லர் கதாபாத்திரத்தில் நடிக்க, டேனியல் க்ரெய்க்கும் தேர்வானது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர்தான் என் முதல் தேர்வாக இருந்தார். ஆனால், அவர் எங்களிடம் கொஞ்ச காலம் அவகாசம் கேட்டார். காரணம் அவர் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கப் பரிசீலிக்கப்படுவதாகச் சொன்னார். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு" என்று மேஹ்ரா தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT