பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா இயக்குநராக களமிறங்க உள்ளார்.
பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா. 90களில் தொடங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழிலும் ‘இந்தியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘புலி’ உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். ‘ரங்கீலா’, ‘குச் குச் ஹோத்தா ஹை’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது மனிஷ் மல்ஹோத்ரா இயக்குநராகவும் களமிறங்க உள்ளார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஒரு காதல் கதையை மனிஷ் மல்ஹோத்ரா இயக்கவுள்ளார். இப்படத்தை மனிஷ் மல்ஹோத்ராவின் நீண்டகால நண்பரும், இயக்குநருமான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.