பாலிவுட்

ஷாரூக்கான் - அட்லி படத்தின் டெஸ்ட் ஷுட் தொடக்கம் 

செய்திப்பிரிவு

ஷாரூக்கான் - அட்லி இணையவுள்ள இந்தி படத்தின் டெஸ்ட் ஷூட் மும்பையில் தொடங்கியது.

இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஷாரூக்கானுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.

தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில், ஷாரூக்கான் படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அட்லி.

இந்நிலையில் ஷாரூக்கான் - அட்லீ படத்துக்கான டெஸ்ட் ஷூட் மும்பையில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஷாரூக் கானின் மேனேஜர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘படப்பிடிப்பு தளத்தில் எனக்கு கூடுதல் பாதுகாப்பு கொண்ட முகக்கவசம் கொடுத்த அட்லிக்கு நன்றி, இது என்னை வித்தியாசமாகவும் உணர வைக்கிறது’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT