நடிகர் சோனு சூட், கரோனா ஊரடங்கு காலத்தில் அவதிப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். குறிப்பாக, பிற மாநிலங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் தங்களது சொந்த சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை சோனு செய்தார். இதன் மூலம் அவருக்கு பேரும், புகழும் கிட்டியது.
நடிகர் சோனு சூட் பேருக்காகவோ புகழுக்காகவோ இதனையெல்லாம் செய்ய நினைக்காமல், உண்மையாக கஷ்டப்படுவோர் பலருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதற்காகவே அவர் ஒரு குழுவையும் நியமித்துள்ளார். இக்குழு, அவருக்கு இ-மெயில் மூலம் வரும் கடிதங்களை ஆராய்ந்து, நேரில் சென்று விசாரித்து, இது குறித்து சோனு சூட்டுக்கு தகவல் கொடுக்கின்றனர். அதன்படி உதவி வருகிறார். இப்படி, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடிகர் சோனு சூட் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இதனால், பலர் இவரை ‘ரியல் ஹீரோ’ என்றழைக்க தொடங்கி விட்டனர். நடிகர் சோனு சூட் செய்யும் உதவிகளை கண்டு அவரின் தீவிர ரசிகராக மாறிய பலரில் ஒருவர் தெலங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (23). இவர் எப்படியாவது நடிகர் சோனு சூட்டை நேரில் சென்று பார்க்க தீர்மானித்தார். இதனால், ஒரு பையில், 2 செட் துணிமணிகளை எடுத்துக்கொண்டு, ‘சோனு சூட் ரியல் ஹீரோ’ எனும் வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி விகாராபாத்திலிருந்து மும்பை நோக்கி 700 கி.மீ தூரம் நடக்க தொடங்கினார். நடுவே பல இன்னல்களை எதிர்கொண்டு, ஒருவழியாக நேற்று முன்தினம் மும்பை சென்றார்்.
தனது வீட்டுக்கு வந்த வெங்கடேஷை சோனு வரவேற்று கட்டித்தழுவி ஆச்சர்யப்பட்டார். ‘ஏன் இவ்வளவு தூரம் நடந்து வர வேண்டும்? நான் அடிக்கடி ஹைதராபாத் வருகிறேன், அப்போது நேரில் வந்து பார்த்திருக்கலாம் அல்லவா? என நாசுக்காக கண்டித்தார். இதுபோல் யாரும் செய்ய வேண்டாமெனவும் சோனு கேட்டுக்கொண்டார். பின்னர் ஹைதராபாத் வரும்போது கண்டிப்பாக வந்து பார்க்கவும் என கூறி வழி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் வெங்கடேஷ் ரயில் ஏறி ஊர் திரும்பினார்.