தயவுசெய்து கொஞ்சம் அன்பும், மரியாதையும் காட்டுங்கள் என்று மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு க்ரீதி கர்பந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அங்கிருந்த மருத்துவர் சியுஜ் குமார் சேனாபதியைக் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
மருத்துவர் தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. இது தொடர்பாகப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வீடியோவில் இருக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தற்போது மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக க்ரீதி கர்பந்தாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் க்ரீதி கர்பந்தா கூறியிருப்பதாவது:
"வன்முறை என்றுமே தீர்வாகாது. நம் மருத்துவர்களும் முன்களப் பணியாளர்களும் நம் உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரை இடருக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் தியாகத்தை, நமது உலகைக் குணப்படுத்த வேண்டும் என்கிற அர்ப்பணிப்பை மதிப்பதுதான் குறைந்தபட்சம் நாம் செய்யக்கூடியது.
நமது மருத்துவர்கள், அவர்களின் குடும்பங்களின் நிலையை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எல்லா நாட்களும், 24 மணி நேரமும் பணியில் இருப்பதைப் பற்றி நினைக்கும்போது எப்படி இருக்கிறது? அவர்கள் உயிரும் இதனால் போகலாம் என்று நினைக்கும்போது எப்படி இருக்கிறது?
தயவுசெய்து கொஞ்சம் அன்பும், மரியாதையும் காட்டுங்கள். இந்தக் கொடிய தொற்றுக்கு நானும் என் அன்பார்ந்தவர்களை இழந்திருக்கிறேன். எனக்கு அந்த வலி தெரியும். ஆனால், இது யார் கையிலும் இல்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும், நம் மருத்துவர்கள் அவர்களால் முடிந்தவற்றைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான் என்பதை மறக்காதீர்கள்.
ஒற்றுமையாக இருந்தால்தான் நம்மால் நிற்க முடியும். பிரிந்தால் வீழ்வோம். இதை நாம் எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நம் வாழ்வு சிறக்கும்".
இவ்வாறு க்ரீதி கர்பந்தா தெரிவித்துள்ளார்.