பாலிவுட்

கோவிட் தடுப்பூசியைப் பற்றிய விழிப்புணர்வுத் தொடர்: ஆலியா பட் தயாரிப்பு

ஐஏஎன்எஸ்

கோவிட் தடுப்பூசியைப் பற்றிய ஐந்து பகுதி கொண்ட தொடரை நடிகை ஆலியா பட் தயாரிக்கிறார்.

தடுப்பூசியைப் பற்றிய புரளிகள், பொய்யான தகவல்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பேசி, அதன் அவசியத்தை இந்தத் தொடர் உணர்த்தும். ஆலியா புதிதாகத் தொடங்கியிருக்கும் எடர்னல் சன்ஷைன் ப்ரொடக்‌ஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கும் ஆலியா, "கோவிட்-19க்கு எதிரான போரில் அறிவியலே நமது உயர்ந்த கூட்டாளி. அறிவியல் நமக்கு தடுப்பூசியைத் தந்திருக்கிறது. தடுப்பூசிகள் நமக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்த நோய்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து நமது வாழ்வை மீண்டும் கட்டமைக்க உதவியிருக்கும் தடுப்பூசிகளுக்கு நன்றி. தடுப்பூசி இங்கு வந்து நமக்காகக் காத்திருந்தும் நம்மில் சிலர் இன்னும் தயக்கம் காட்டுகிறோம்.

இந்தத் தயக்கத்துக்கு முக்கியக் காரணம், சமூக ஊடகம் உள்ளிட்ட தளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள், புரளிகள், நம்பிக்கைகள். ஆம் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தான். ஆனால் நம்பிக்கையானவர்களிடமிருந்து தடுப்பூசி குறித்து நாம் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் பற்றி அறிவார்ந்த முடிவை எடுக்கலாம்.

இந்தத் தொடரில், திறமையான மருத்துவர்கள், சர்வதேச சுகாதார ஆர்வலர்களிடம் பேசப் போகிறோம். தடுப்பூசி பற்றிய உண்மைத் தகவல்களை, தரவுகளை அவர்கள் பகிரவுள்ளனர். முதல் பகுதி நாளை வெளியாகவுள்ளது. பாட்காஸ்ட் மற்றும் காணொலி வடிவங்களில் அது கிடைக்கும். இந்தத் தொடர் தடுப்பூசி பற்றிய உங்களது சில சந்தேகங்களைத் தீர்க்க உதவும் என்று நம்புகிறேன்" என்று பேசியுள்ளார்.

ஆடியோமேடிக் என்கிற பாட்காஸ்ட் தளத்தோடு சேர்ந்து இந்தத் தொடரை ஆலியா தயாரித்துள்ளார்.

SCROLL FOR NEXT