'சீதா' என்கிற படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு புராணம், இதிகாசம், வரலாற்றுப் புனைக் கதைகளை பிரம்மாண்டமாக எடுக்கும் போக்கு பாலிவுட்டில் பரவலாகி வருகிறது. பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்', தீபிகா படுகோன் நடிப்பில் 'திரவுபதி' ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகின்றன.
இந்த வரிசையில், பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுத்தில் ராமாயாணம் கதை திரைப்படமாக உருவாகிறது. ராமரின் மனைவி சீதாவின் பார்வையில் கதை சொல்லப்படவிருப்பதால் இந்தப் படத்துக்கு 'சீதா' என்றே பெயரிடப்பட்டுள்ளது.
சீதையாக நடிக்க ஆலியா பட், கரீனா கபூர் ஆகிய இருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் கரீனாவுக்கே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசப்பட்டுள்ளது.
அலாவ்கிக் தேசாய் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ரன்வீரும், கரீனாவும் நடிப்பது உறுதியானால், இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இது இருக்கும்.
இருவருக்குமே இதுவரை சொல்லப்பட்ட கதை சுருக்கம் பிடித்திருந்ததாகவும், மேற்கொண்டு திரைக்கதையின் இறுதி வடிவத்தை அறிந்த பிறகு தங்கள் முடிவுகளைத் தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.