பாலிவுட்

தனது படங்களின் வெளியீடு குறித்து வதந்தி: அக்‌ஷய் குமார் விளக்கம்

செய்திப்பிரிவு

தனது படங்களின் வெளியீடு தொடர்பாக உருவான வதந்திக்கு அக்‌ஷய் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி திரையுலகில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருபவர் அக்‌ஷய் குமார். ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'சூர்யவன்ஷி' திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது. இதற்கு கரோனா அச்சுறுத்தல்தான் காரணம்.

மேலும், கரோனா காலத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட 'பெல் பாட்டம்' திரைப்படமும் ஒரே கட்டமாக முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இதனால், கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், இரண்டு படங்களுமே சுதந்திர தினத்துக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின. ஒரே நாளில் இரண்டு அக்‌ஷய் குமார் படங்களா என்று விநியோகஸ்தர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது.

தற்போது இது தொடர்பாக அக்‌ஷய் குமார் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'சூரியவன்ஷி', 'பெல் பாட்டம்' படங்களின் வெளியீடு குறித்து எனது ரசிகர்களின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அத்துடன் அவர்களின் அன்பிற்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

எனினும், இந்தக் கட்டத்தில், இவ்விரண்டு படங்களும் சுதந்திர தினம் அன்று வெளியாகும் என்று கூறப்படுவது உண்மை அன்று. இரு படங்களின் தயாரிப்பாளர்களும் வெளியீட்டுத் தேதி குறித்து ஆலோசித்து வருகிறார்கள். சரியான நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்"

இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT