பாலிவுட்

வெளிநாடுகளில் ரூ.13 கோடி வசூல் செய்த 'ராதே': முதல் மூன்று நாள் வசூல் விவரம் வெளியீடு

செய்திப்பிரிவு

சல்மான் கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'ராதே' திரைப்படம், வெளிநாடுகளில் முதல் வார இறுதியில் ரூ.13 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்துள்ள படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது.

ஊரடங்கு தொடர்வதாலும், இனிமேலும் ரசிகர்களைக் காக்க வைக்க முடியாது என்பதாலும் படத்தை மே 13 அன்று ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிட்டனர். விமர்சன ரீதியாகக் கடுமையாக சாடப்பட்டாலும் படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஜீ5 தரப்பு அறிவித்துள்ளது.

இதுதவிர திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் சில அயல் நாடுகளில் திரையரங்கிலும் படம் வெளியாகியுள்ளது. அதில் முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ரூ.1.55 கோடி, நியூஸிலாந்தில் ரூ. 27.81 லட்சம், அமெரிக்கா ரூ.1.20 கோடி, ஐக்கிய அரபு அமீரகம் ரூ.8.89 கோடி என மொத்தமாக ரூ.13.03 கோடியைப் படம் வசூலித்துள்ளது.

இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, சூழல் சகஜமான பிறகு படத்தைத் திரையரங்கிலும் வெளியிடுவோம் என்று நடிகர் சல்மான் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT